5:58 PM
0
 
 
இந்த தீபாவளிக்கு எத்தனை படங்கள் வெளியாகும்? இந்தக் கேள்வியை கடந்த ஒரு மாத காலமாக கேட்டு வருகிறார்கள் சினிமாக்கார்களும் பத்திரிகையாளர்களும். ஆனால் சரியான பதில் நஹி!
 
காரணம் தியேட்டர்கள் பற்றாக்குறை (விரிவான தகவல்கள் இன்னொரு கட்டுரையில்!)
 
இந்த தீபாவளிக்கு தமிழில் இரண்டே இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகின்றன. அவை விஜய் நடித்துள்ள வேலாயுதம், சூர்யா நடித்துள்ள ஏழாம் அறிவு. இவற்றுடன் மோதப் போவதாக அறிவித்த தனுஷின் மயக்கம் என்ன மற்றும் சிம்புவின் ஒஸ்தி படங்கள் பல்வேறு காரணங்களைக் கூறி விலகிக் கொண்டன (எனக்கு உடம்பு சரியில்லை - மயக்கம் என்ன இயக்குநர் செல்வராகவன்!).
 
வேலாயுதம்
 
விஜய் நடித்துள்ள இந்தப் படம், தெலுங்கில் வெளியான நாகார்ஜுனா படமொன்றின் தழுவல். ரீமேக் புகழ் ஜெயம் ராஜா முதல் முறையாக தன் வீட்டு ஹீரோ ரவியை விடுத்து, வெளி ஹீரோ ஒருவரை வைத்து எடுத்துள்ள படம். விஜய்க்கு இந்தப் படம் ஓடியே தீர வேண்டிய கட்டாயம். எனவே எதிர்ப்பார்ப்பு பெரிய அளவில் உள்ளது.
 
ஜெனிலியா - ஹன்ஸிகா என இரு நாயகிகள், விஜய் ஆன்டனி இசை. பாடல்கள் பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் ட்ரெயிலர் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


ஏழாம் அறிவு
சூர்யா நடித்துள்ள ஏழாம் அறிவு, ஏ ஆர் முருகதாஸின் படைப்பு. சூர்யாவை விட முருகதாஸ் மீதுள்ள நம்பிக்கை இந்தப் படக்கும் அபார எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படத்தின் இரண்டு பாடல்களும், ட்ரெயிலரும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது நிஜம். கமல் மகள் ஸ்ருதிக்கு தமிழில் இது முதல் படம்.
 
தமிழகத்தின் பெருமளவு நல்ல திரையரங்குகள் இந்தப் படத்துக்குக் கிடைத்திருப்பது இன்னொரு ப்ளஸ். அரசியலில் ஆயிரம் மாற்றங்கள் நடந்தாலும், எல்லாருக்கும் நல்ல பிள்ளையாக திகழ்வதால் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைத்துள்ளது. படம் குறித்து முதல்நாள் வரும் 'மவுத் டாக்'தான் ரொம்ப முக்கியம் என்று நம்புகிறார் முருகதாஸ்.


ரா ஒன்
 
வேலாயுதம், ஏழாம் அறிவை விட, பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் படம் ரா ஒன். காரணம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை... சூப்பர் ஸ்டார் ரஜினி இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். தன் கேரக்டருக்கு தானே டப்பிங் பேசியும் உள்ளார். எனவே தங்கள் தலைவரின் தரிசனம் காணவும் குரலைக் கேட்கவும் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் அவரது லட்சோப லட்சம் ரசிகர்கள். இவர்கள் அத்தனை பேரும் ஒரே ஒரு முறை இந்தப் படத்தைப் பார்த்தால் போதும், ரா ஒன் பாக்ஸ் ஆபீஸில் ஏ ஒன்னாகிவிடும் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்!
 
சென்னையில் மட்டும் 30 அரங்குகளில் ரா ஒன் தமிழ் மற்றும் இந்தி வெளியாகிறது. எல்லாமே உயர்தரமான அரங்குகள். தவிர தமிழகத்தின் முக்கிய நகரங்களிலெல்லாம் இந்தப் படம் வெளியாகிறது. ஷாரூக்கான் போட்ட முதல் தமிழகத்தில் மட்டுமே வசூலாகிவிடும் வாய்ப்புள்ளது. இன்னும் ஆந்திராவில் கேட்கவே வேண்டாம். ஹைதராபாதில் மட்டும் 80 அரங்குகளில் இந்தப் படத்தை வெளியிடுகின்றனர்!
இந்த தீபாவளி ரேஸில் வழக்கம் போல ஓரிரு சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகும் வாயாப்புள்ளது. இவை வெற்றியை குறிவைத்து வெளியாவதில்லை. தீபாவளி வாரத்தின் கடைசி 5 நாள் வசூலை குறிவைத்து இறக்கப்படுபவை!



0 comments:

Post a Comment

POPULAR POSTS