3:01 AM
0
தயாரிப்பு – ஆஸ்கர் பிலிம்ஸ் – வி. ரவிச்சந்திரன்
இயக்கம் – பரத் பாலா
இசை – ஏ.ஆர். ரகுமான்
ஒளிப்பதிவு – மார்க் கோனின்க்ஸ்
படத்தொகுப்பு – விவேக் ஹர்ஷன்
பாடல்கள் – வாலி, ஏ.ஆர். ரகுமான், தனுஷ், கபிலன், குட்டி ரேவதி, பிளாஸி, பிரையன் கப்வே, சோஃபியா அஷ்ரப், மோகன் ராஜ்.
திரைக்கதை – பரத் பாலா, ஸ்ரீராம் ரஞ்சன்
வசனம் – ஜோ டி க்ரூஸ்
சண்டைப் பயிற்சி – திலீப்குமார் சுப்பராயன், ஆக்ஷன் பிரகாஷ்
நடனம் – பிருந்தா, நோபுள், காயத்ரி ரகுராம், ராதிகா பழனியப்பன்
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா
நடிப்பு – தனுஷ், பார்வதி, அப்புக்குட்டி, ஜெகன் புருஷோத்தம், சலீம் குமார், விநாயகன் டிகே, டி. இம்மானுவேல், உமா ரியாஸ்கான், அங்குர் விகால் , அறிமுகம் – கிறிஸ்டோபர் மின்னி, டக்பே ட்வே, பார்ரி மைது மற்றும் பலர்.
வெளியான தேதி – 19 ஜுலை 2013

“நீர்ப்பறவை”,“கடல்” படங்களைத் தொடர்ந்து வந்திருக்கும் கடல் சார்ந்த மனிதர்களைப் பற்றிய படம். ஒரே சமயத்தில் எப்படி ஒரே மாதிரியானை கதைகளை யோசித்தார்களோ தெரியவில்லை.
இடைவேளை வரை ஹீரோ, ஹீரோயினின் கதாபாத்திரப் படைப்பு அந்த படங்களில் உள்ளதைப் போலவே இருந்து ஆச்சரியப்பட வைக்கிறது. இந்த படத்திலும் ஹீரோ எப்போதும் குடித்துக் கொண்டே இருக்கிறார். ஹீரோயின் மதப் பணியில் ஈடுபாடு கொண்டு இருக்கிறார். இருவருக்கும் இடையே காதல்…நல்ல வேளை இடைவேளைக்குப் பின், கதை வேறு பாதையில் நகர்ந்து விடுகிறது.
நீரோடி என்ற மீனவ கிராமத்தில் கடலுக்கே ராசாவாக இருப்பவர் தனுஷ். இவர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றால், கடலே காலியாகிவிடும் அளவிற்கு மீனைப் பிடிப்பவர். அதே ஊரில், தனுஷ் மீது வெறித்தனமான (!) காதலுடன் சுற்றி வருபவர் பார்வதி. இவரின் அழகில் மயங்கி திருமணம் செய்து கொள்ளத் துடிப்பவர் வட்டிக்கு பணம் கொடுத்து சம்பாதிக்கும் வினாயகன்.
இவர் ஒரு முறை பெண் கேட்டு பார்வதி வீட்டுக்குச் செல்ல, தனுஷ் அவரிடம் சண்டைக்குப் போக, வினாயகன், பார்வதி அப்பா பட்ட கடனை அடைக்கச் சொல்ல, அதை தான் அடைப்பதாகச் சொல்லி, சூடான் நாட்டிற்கு வேலைக்குச் செல்ல முடிவெடுத்து, கடனை அடைத்து விட்டு, சூடான் சென்று விடுகிறார் தனுஷ்.
இதெல்லாம் இரண்டு வருடத்து பிளாஷ்பேக். ஊருக்கு கிளம்ப ஒரு வாரம் இருக்கும் நிலையில் அந்த நாட்டு தீவிரவாதிகள் (தங்கள் மண்ணைக் காப்பாற்றத் துடிப்பவர்கள் தீவிரவாதிகளா ?) தனுஷை கடத்தி விடுகிறார்கள். அதிலிருந்து மரணமே இல்லாதவன் என்ற அர்த்தம் கொண்ட ‘மரியான்’ எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை.
தனுஷ் இதுவரை ஏற்று நடிக்காத ஒரு மீனவ கதாபாத்திரம். உடலால்தான் இளைத்தவர், நடிப்பால் சளைத்தவர் இல்லை என மீண்டும் ஒரு தேசிய விருதுக்கு அச்சாரம் போடுகிறார் தனுஷ். பார்வதியை கடற்கரையில் வைத்து அடிக்க முயற்சிப்பதாகட்டும், பின்னர் அவர் மீது காதல் வந்து தனிமையில் காதலை ருசிப்பதாகட்டும் நடிப்பில் எங்கோ போய்விடுகிறார்.
அடிக்கடி பீடி குடிப்பது மட்டும் ஏனோ ? ”ஒரு பீடியே இன்னொரு பீடியை குடிக்கிறதே” என விவேக் பாணியில் கவிதைதான் தோன்றுகிறது. மாமனார் மாதிரி நீங்களும் இனி இம்மாதிரி காட்சிகளில் நடிக்க மாட்டேன் என அறிக்கை விடலாமே …
‘பூ’ படத்திலேயே மனம் கவர்ந்தவர் இடையில் காணாமல் போய் ‘சென்னையில் ஒரு நாள்’ படத்தில் மீண்டும் வந்து, இந்த ‘மரியான்’ படத்தில் மீண்டும் ஒரு முறை மனம் கவர்ந்து விட்டார். சரிதா, ஷோபா, ரேவதி இப்படி அனைவர் கலந்த கலவையாக இருக்கிறார் நடிப்பில். அவர் முகபாவம் நடிப்பதற்கு முன்னாலே அந்த ‘இரண்டு கண்கள்’ நடித்து விடுகின்றன. ( ஐ ப்ரோ மட்டும் பார்லர்ல போய் ட்ரிம் பண்ணாம இருந்திருக்கலாம்).
ஆனாலும், டீன் ஏஜ் பருவத்தை தாண்டிய பெண்ணாக தோற்றமளிப்பவரை கிளாமருக்காக பாவாடை, சட்டை அணிய விட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம். தமிழ் சினிமாவையும் ஞாபகம் வச்சிக்குங்க பார்வதி…
அப்புக்குட்டி நண்பனின் காதலுக்காக உதவி செய்து, “எந்த பாவியாலேயோ” சுடப்பட்டு இறந்து விடுகிறார். (உண்மையை சொல்ல என்ன தயக்கம் இயக்குனரே, தமிழன் மரணம் உங்களுக்கு சென்டிமென்ட் காட்சிக்கு மட்டுமே).
தனுஷ் அம்மாவாக உமா ரியாஸ்கான், நடிப்பில் காந்திமதிதான் எட்டிப் பார்க்கிறார். நீங்கள் உங்க அம்மா கமலா காமேஷ் படங்களைப் பார்த்தாலே போதுமே,  யதார்த்தமா நடிச்சிடலாமே.
தனுஷுடன் சேர்ந்து தேசிய விருது பெற்ற மலையாள நடிகர் சலீம் குமார், பார்வதியின் அப்பாவாக வீணடிக்கப்பட்டிருக்கிறார். அதிலும் அவருக்கு வைக்கப்பட்டுள்ள அந்த ‘விக்’கிற்கு ஒப்பனையாளர்தான் பதில் சொல்ல வேண்டும்.
‘திமிரு’ படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் வலது கரமாக, தாங்கி தாங்கி நடந்து, நடிப்பில் நிமிர்ந்த டி.கே. வினாயகன், பார்வதி மீது ஆசைப்படும் சிறு வில்லனாக நடித்திருக்கிறார்.
ஜெகன், இமான் அண்ணாச்சி இவர்களும் படத்தில் இருக்கிறார்கள். சூடான் போராட்டக்காரர்கள் தீபாவளி துப்பாக்கி போல் சரமாரியாக சுட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். இவர்கள் பேசும் போது சப் டைட்டிலாவது போட்டிருக்கலாம்.
ஏ.ஆர். ரகுமான்தான் படத்தின் உயிர் மூச்சு. பாடல்களிலும் சரி, பின்னணி இசையிலும் சரி மரியானை மறக்க விடாமல் செய்திருக்கிறார்.
கவிஞர் வாலி எழுதிய “நேற்று அவள்…” பாடல் இந்த ஆண்டின் சூப்பர் மெலடி. கபிலன் எழுதிய “இன்னும் கொஞ்ச நேரம்..” பாடலும் இனிமை. யுவன் பாடியிருக்கும் ‘கடல் ராசா…” கலக்கலோ கலக்கல். ரகுமான் பாடியுள்ள ‘நெஞ்சே எழு…” சரியான எழுச்சிப் பாடல், ஆனால் இந்த காதல் படத்துக்கு தேவையில்லாத ஒன்று. வேறு ஒரு புரட்சிகரமான படத்திற்கு பயன்பட்டிருக்கலாம்.
ஒளிப்பதிவாளர் மார்க் கோனின்க்ஸ் கடல், பாலைவனம் என படத்தை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்.
இடைவேளைக்குப் பின் படம் தள்ளாடுகிறது. எப்போது தனுஷ் தப்பிப்பார் என்று யோசிக்க வைத்து விடுகிறது. சூடான் பாலைவனத்தை சுற்றி, சுற்றிக் காண்பித்து கொஞ்சம் போரடித்து விடுகிறார்கள்.
ஏ.ஆர். ரகுமான், தனுஷ், பார்வதி இவர்களுக்காக படத்தைப் பார்க்கலாம்.

0 comments:

Post a Comment

POPULAR POSTS